
போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை போக்குவரத்து கண்காணிப்பு அமைப்பு மூலம் அடையாளம் காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ள பொது பாதுகாப்பு அமைச்சு, விதிகளை மீறுவோருக்கான அபராதச் சீட்டுகளை அவர்களது வீட்டுக்கு அனுப்பவும் பொலிஸ் திணைக்களம் விரைவில் ஒரு அமைப்பை அறிமுகப்படுத்தும் என்று தெரிவித்துள்ளது.
மோட்டார் போக்குவரத்து திணைக்களம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் ஆகியவற்றுடன் பொலிஸாரும் இணைந்து இந்த அமைப்பை ஏற்படுத்துவதற்கு செயற்பட்டு வருவதாக அமைச்சு அறிவித்துள்ளது.
கொழும்பு நகரின் 33 வீதிகளை உள்ளடக்கிய சீசீரிவி பிரிவை பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர அண்மையில் பார்வையிட்டார்.
இந்த பிரிவு 2010 ஆம் ஆண்டில் போக்குவரத்து இயக்கங்களை கண்காணிக்க உருவாக்கப்பட்டது.
தற்போதுள்ள தொழில்நுட்பத்தின் கீழ், போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகள் மெதுவாகவே நடைபெறுவதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
போக்குவரத்து அபராத சீட்டுகளை விதிகளை மீறுவோரின் வீட்டுக்கு அனுப்பும் முறை விரைவில் தொடங்கப்படும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.