
அம்பாறை சாய்ந்தமருது பகுதியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் உடற்பாகங்கள் நாளை (27) தோண்டி எடுக்கப்படவுள்ளளன.
கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்தியார் தேவாலயத்தில் குண்டுத் தாக்குதல் நடத்திய மொஹமட் ஹஸ்துனின் மனைவியான புலஸ்தினி மகேந்திரன் என்றழைக்கப்படும் சாரா ஜெஸ்மின் என்பவரின் மரபணு (DNA) மாதிரியை அடையாளம் காண்பதற்காக குறித்த உடற்பாகங்கள் தோண்டியெடுக்கப்படவுள்ளதாக, காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய கல்முனை நீதவான் நீதிமன்றத்தினால் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அம்பாறை நீதவானின் மேற்பார்வையின் கீழ் சடலங்கள் அல்லது உடற்பாகங்களை தோண்டியெடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதுடன், முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி, அரச பகுப்பாய்வாளர் மற்றும் புலனாய்வு அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.
கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, ஏப்ரல் 26ஆம் திகதி சாய்ந்தமருதுவில் உள்ள ஒரு வீட்டில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 17 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்ட போதிலும் 16 பேரினது உடற்பாகங்களே கண்டுபிடிக்கப்பட்டன.
மேற்படி சந்தேகநபரான சாரா இந்தியாவுக்கு தப்பிச் சென்றுவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.
இந்நிலையில் சாரா உயிரழந்துள்ளாரா அல்லது இந்தியாவுக்கு தப்பிச் சென்றுள்ளாரா என்பதை உறுதிப்படுத்த இந்த மரபணு பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளது.