
பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரீன் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரினால் நேற்றைய தினம் பிரதமருக்கு அனுப்பப்பட்ட கடிதத்திற்கு பிரதமர் இன்று பதில் அனுப்பியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் எழுப்பிய ஏழு கேள்விகளுக்கு பிரதமர் பதிலளித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பதவி நீக்கம் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, 21வது திருத்தத்தை நிறைவேற்றி ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைத்து பாராளுமன்றத்திற்கு பொறுப்புக்கூறும் ஜனாதிபதியை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலை தொடர்பில் உச்ச நீதிமன்றத்துடன் இணைந்து செயற்பட வேண்டும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
பொருளாதார ஸ்திரத்தன்மை ஏற்பட்டவுடன் நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஆயத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் தனது கடிதத்தில் பரிந்துரைத்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் வெளிநாட்டு புலனாய்வாளர்களின் உதவியை நாட தயாராக இருப்பதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
கட்சி சார்பற்ற அரசாங்கத்தை அமைப்பதற்குத் தேவையான ஆதரவை வழங்குமாறு இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் கோரிக்கை விடுத்து பிரதமர் தனது கடிதத்தை முடித்துள்ளார்.