
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்யுமாறு கோரி குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு முன்பாக இன்று (04) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பதற்றமான சூழல் காணப்பட்டது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் சுமார் ஐந்து மணிநேர வாக்குமூலம் பதிவு செய்தார்.
கடந்த மே மாதம் 09 ஆம் திகதி கொழும்பில் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பில் வாக்குமூலம் பதிவுசெய்வதற்காகவே பாராளுமன்ற உறுப்பினர் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பில் காலி முகத்திடலில் உள்ள அரசாங்க எதிர்ப்புப் போராட்டத் தளத்திற்குச் செல்லுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் விசுவாசிகளை தூண்டியதாக முன்னாள் அமைச்சர் பலரால் குற்றம் சாட்டப்பட்டார்.
தாக்குதல்களுக்கு முன்னதாக அலரிமாளிகையில் நடைபெற்ற அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் விசுவாசிகள் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களை அலரிமாளிகைக்கு வெளியிலும் காலி முகத்திடலிலும் தாக்கினர், இதன் விளைவாக நாடு முழுவதும் பரவலான அமைதியின்மை வெடித்தது.