
அமைதிப்பூங்காவாக திகழ வேண்டிய எமது பூமி வன்முறைகளால் நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது என்பதை நாம் ஒத்துக் கொண்டே ஆக வேண்டும். இல்லையா??? சகோதரர்களே! இப்பூவுலகில் வாழும் நாம் பல விதங்களில் எம்மைப்பாகுபடுத்தியுள்ளோம். அவ்வாறு நாம் கடவுள் நம்பிக்கையை அடிப்படையாக வைத்து ஆஸ்திகன், நாஸ்திகன் என்று எம்மைப பாகு படுத்தியுள்ளோம். அப்படித்தானே சகோதரர்களே! இங்கு நாத்திகர்களின் நிலை ஒரு வகையானது. பகுத்தறிவையும், இயற்கையையும் அவரவர் சிந்தனை செயல்பாடுகளையும் அடிப்படையாக வைத்து அவர்களின் பாடு ஒடிக்கொண்டு கொண்டிருக்கின்றது. ஆனால் கடவுள் உண்டு என்ற நம்பிக்கையுடன் வாழும் மனிதர்களை பற்றியே நான் எனது கண்ணோட்டத்தை செலுத்துகிறேன்.
சகோதரர்களே! மதம் என்பது மிகப்பெரிய நம்பிக்கை சார்ந்த விடயம். மனிதர்களை புனிதர்களாக ஆக்குவதே மதங்களின் நோக்கம். எந்த ஒரு மதமும் தீயதை கற்பித்து உள்ளதா?? என நாம் ஆராய்ந்தால் அதன் பதில் பூச்சியமாகவே இருக்கும் இல்லையா? சகோதரர்களே, இருந்தும் இன்று உலகம் முழுவதும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வன்முறைகளுக்கும் தீவிரவாதச் செயல்களுக்கும் ‘மதம்’ என்பது காரணம் என்ற மாயத் தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது.
அல்குர்ஆனின் போதனைகளில் ஒரு கருத்து உள்ளதா? முஹம்மது நபியோ இயேசுநாதரோ புத்தரோ மனித குலத்திற்கு தவறான பாதையை காட்டி உள்ளார்களா? சிந்தித்துப்பாருங்கள் சகோதரர்களே! இந்த அவலநிலை மதத்தின் பெயரால் உலகம் முழுவதும் வன்முறைகளும் தீவிரவாத போக்குகளும் தலைவிரித்து ஆடுவதை அன்றாடம் கண்கூடாகக் காண்கிறோம், கேள்வியுறுகிறோம். மேற்குலக நாடுகள்,மத்திய கிழக்கு நாடுகளின் மீது பல்வேறு வடிவங்களில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றது. நாடுகளுக்கு இடையிலான எல்லைப்போர்கள் கூட மதத்தை அடிப்படையாக வைத்தே நடைபெறுகிறது என்பது நாம் அறிந்த விடயம் தானே. சகோதரர்களே! இந்தியா பாகிஸ்தான் போர் பல தசாப்தங்களாக நடைபெற்று வருகின்றது, பழம்பெரும் மசூதியான பாபர் மசூதி தாக்கப்பட்டதும் அதனைத் தொடர்ந்து முஸ்லிம்கள் மீது வன்முறை கட்டவிழ்க்கப்பட்டமைக்கும் காரணம் ‘மதம்’ என்பதே மிகவும் வருந்தத்தக்க விடயம். சகோதரர்களே! இன்னும் ரோகின்யா முஸ்லிம்கள் துன்புறுத்தப்பட்டமைக்கும் மதமே காரணம் இன்னும் எமது இலங்கைத் திருநாட்டில் ஏப்ரல் 21 என்ற கருமை நாள் வரலாற்றில் இடம்பெற்றமைக்கு மதமே காரணம். எமது இலங்கை நாட்டில் பல தசாப்தங்களாக நடைபெற்ற யுத்தத்திற்கு இனப்பிரச்சினையே காரணம் எனினும் இவற்றிற்கு யார் பொறுப்பு??? அல்லாஹ் மனிதர்களை படு கொலை செய்யச் சொன்னானா? இராமர் கோயில் கட்டக்கேட்டாரா??? புத்தரும் இயேசுவும் மனித வதையை விரும்பினார்களா? இல்லையே சகோதரர்களே!
மனித குலத்திற்கு ‘மதம்’ என்னும் மதம் பிடித்தமையே காரணம். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள் மதப்பற்று, இனப்பற்று மனிதனுக்கு தேவையானதும் அவை மனிதனை நேர்வழிப்படுத்தவுமே ஆகும். ஆனால் எம்மவர்களுக்கு ஏற்பட்டுள்ளது மத வெறியும் இனவெறியுமே அன்றி வேறில்லை. தனது மதத்தையும் பிற மதத்தையும் மதித்து நடக்கவேண்டிய மானிட சமூகம் தனது மதத்தை மதித்து பிற மதத்தை மிதித்து வாழ முற்பட்டமையே தீவிரவாதம் தலைதூக்க காரணம் என்பதை எவரேனும் மறுக்கிறீர்களா???
உலகிலே தீவிரவாதத்தை அழித்து சமாதானத்தை நிலைநாட்ட பல முயற்சிகள் எடுக்கப்பட்டமையும் நாம் அறிந்து வைத்துள்ளோம் தானே. ஐக்கிய நாடுகள் சபை இதன் பிரதான மையமாகத்திகழ்கின்றது. உலக சமாதான தினம், சமாதான ஒப்பந்தங்கள், சமாதானப் பேச்சுவார்த்தைகள் என பல முயற்சிகளையும் தோற்கடித்து தீவிரவாதம் தலைதூக்கி உள்ளது வேதனை தரவில்லையா?
மதக்கருத்துக்களை நுனிப்புல் மேயாமல் அதன் ஆழக்கருத்துக்களை உணர்ந்து செயற்பட வேண்டும்.
மதங்கள் நம்மை நல்வழிப்படுத்தும் சாதனம் என்ற உணர்வை நமக்குள் விதைக்க வேண்டும். மத நல்லிணக்கங்களை ஏற்படுத்த தமக்குத்தாமே முயலவேண்டும். அன்றேல் மதப்பிரிவுகளே தீவிரவாதத்தை தூண்டும் பிரதான காரணமாக அமையும் என வருத்தத்துடன் கூறுகின்றேன்.
ஆக்கம்,
சமீரா சிராஜ்