
காணி பிரச்சினைகளை தீர்ப்பதற்கு மாகாண மட்டத்தில் 8 குழுக்களை நியமிக்கவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் வடக்கு மற்றும் தெற்கில் உள்ள அனைத்து காணி பிரச்சினைகளையும் தீர்க்க முடியும் என ஜனாதிபதி தெரிவித்தார்.
வவுனியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும்,வடமாகாணத்தின் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மூன்று மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் இந்த அபிவிருத்திக் குழுக் கூட்டம் கூட்டப்பட்டதாகவும், அந்த மாவட்டங்களின் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகள் கலந்துகொண்டதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மாகாணத்தில் நிலம், வீடமைப்பு, சுகாதாரம், நீர்ப்பாசனம் மற்றும் விவசாயம் ஆகிய துறைகளில் எழுந்துள்ள பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கு வழங்கப்படக்கூடிய தீர்வுகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது. வடமாகாணத்தில் பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளை வழங்கி மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் அதற்கு வடமாகாண உறுப்பினர்கள் அனைவரினதும் ஆதரவை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அழைப்பு விடுத்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், மன்னார் மாவட்ட மீனவர்களுக்கு மண்ணெண்ணெய் வழங்குவதில் பல்வேறு குளறுபடிகள் இடம்பெற்றுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் றிசாத் பதுர்தீன் உண்மைகளை தெளிவுபடுத்தியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் அவசர விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.