
ஒரு முட்டையை 50 ரூபாய் விலையில் வழங்குவதில் பிரச்னை இல்லை என முட்டை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், சந்தையில் முட்டை விநியோகம் தொடர்பில் வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே முட்டை உற்பத்தியாளர்கள் இந்த கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
அத்தோடு, கொரோன தொற்று நிலைமை மற்றும் கடந்த காலங்களில் ஏற்பட்ட எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் சோயா, சோளம் உள்ளிட்ட கால்நடைத் தீவனங்களின் விலையில் ஏற்பட்ட விரைவான அதிகரிப்பு காரணமாக கடந்த பருவத்தில் முட்டை உற்பத்தி குறைந்துள்ளதாகவும் உற்பத்தியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும், அங்கு கருத்து தெரிவித்த அமைச்சர் நளின் பெர்னாண்டோ, கால்நடை தீவனத்தின் விலைகள் குறைந்து வருவதாகவும், எதிர்காலத்தில் விலை மேலும் குறையும் எனவும் தெரிவித்தார்.
இதன்படி, சந்தையில் முட்டை விநியோகத்தை அதிகரிக்கும் வகையில் உற்பத்தியாளர்களுக்கு கடனுதவி வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரசாங்க அதிகாரிகளுக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்ததாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.