
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையின் அழைப்பாளர் வசந்த முதலிகேவை நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வசந்த முதலிகே இன்று கொழும்பு மேலதிக நீதவான் தரங்கா மஹவத்த முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது இந்த வழக்கு தொடர்பான விசாரணைகளில் 60 வீதமான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீர்ஸ் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விசாரணைகளின் போது, சந்தேகநபரான வசந்த முதலிகேவிடம் இருந்து சுமார் ஒன்பது வாக்குமூலங்கள் பெறப்பட்டதாகவும், அது தொடர்பில் மேலும் 1150 பேரின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பான சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு கால அவகாசம் தேவை எனவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, முன்வைக்கப்பட்ட கூற்றினை பரிசீலித்த மேலதிக நீதவான் சந்தேக நபரை நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
மேலும், விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து நாளை தெரிவிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.