
நிலவும் குளிர் காலநிலை காரணமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உயிரிழந்த மாடுகள் மற்றும் ஆடுகளின் எண்ணிக்கை 1,660 ஆக அதிகரித்துள்ளதாக இன்று நண்பகல் 12 மணியளவில் பெறப்பட்ட தரவுகளின்படி விவசாய அமைச்சு இதனை அறிவித்துள்ளது.
இதன்படி, வடமாகாணத்தில் மாடுகள் 691 இறப்புகளும், ஆடுகள் 296 இறப்புகளும் பதிவாகியுள்ளன. கிழக்கு மாகாணத்தில் உயிரிழந்த மாடுகளின் எண்ணிக்கை 511 ஆகும். மேலும், கிழக்கு மாகாணத்தில் 44 மான்களும், 108 ஆடுகளும் உயிரிழந்துள்ளதாக விவசாய அமைச்சு அறிவித்துள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்னர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பதிவாகிய விலங்குகளின் எண்ணிக்கை 1,096 என விவசாய அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
மேலும், தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு கிழக்கு மாகாணத்தில் உள்ள இறைச்சிக் கூடங்கள் மற்றும் இறைச்சிக் கடைகளை ஒரு வார காலத்திற்கு மூடுவதற்கு கிழக்கு மாகாண உள்ளூராட்சி திணைக்களம் தீர்மானித்துள்ளது. அதன்படி இன்று முதல் வரும் 18ம் திகதி வரை மூடுவதற்கு சம்பந்தப்பட்ட துறைகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
எவ்வாறாயினும், குறித்த உத்தரவு கோழி இறைச்சி கடைகளுக்கு பாதிப்பில்லை என உள்ளூராட்சி ஆணையாளர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நம்பகமான இடங்கள் அல்லாத இடங்களிலிருந்து இறைச்சியை கொள்வனவு செய்யும் போது அவதானமாக இருக்குமாறு இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் மக்களுக்கு அறிவித்துள்ளது.