
மாலைதீவிற்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி தோட்ட தொழிலாளர்களிடம் பணம் பெற்ற சந்தேக நபரை கைது செய்ய நாவலப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மேலும், குறித்த சந்தேக நபர் கினிகத்தேன பிளாக்வாட்டர் தோட்டத்தைச் சேர்ந்த 197 தோட்டத் தொழிலாளர்களிடம் இருந்து தலா 30,000 ரூபா பணத்தைப் பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அத்தோடு, மாலத்தீவில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள சுற்றுலா விடுதிகளில் வேலை செய்வதற்குத் தொழிலாளர்கள் தேவைப்படுவதாகத் தரகர் மூலம் தோட்டத் தொழிலாளர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒருவருக்கு மாதாந்தம் ஒரு இலட்சத்து எண்பத்து மூவாயிரம் ரூபா சம்பளம் வழங்கப்படும் எனவும் தரகர் கூறியதாக தோட்டத் தொழிலாளர்கள் சுட்டிக்காட்டினர்.
மேலும், தோட்டத் தொழிலாளர்கள் தலா 12,500 ரூபாவை மருத்துவப் பதிவேடுகளைப் பெற்றுக்கொள்வதற்காக இரத்மலானை பிரதேசத்தில் உள்ள மருத்துவ நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதோடு மருத்துவப் பதிவேடுகளைப் பெற்றுக்கொண்ட பின்னர் தரகர் தலைமறைவாகியுள்ளதாக தோட்டத் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
மேலும், இது தொடர்பில் செய்யப்பட்ட முறைப்பாடுகளின் அடிப்படையில் சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸ் நிலையம் தெரிவித்துள்ளது.