
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம் தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தலை ஒன்றினை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
இதன்படி, உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் கட்டளைச் சட்டத்தின் நான்கு மற்றும் ஒன்றில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், உரிய வர்த்தமானி அறிவித்தலின்படி, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு தேர்தல் நடத்தும் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளதுடன், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட செயலாளர் தேர்தல் நடத்தும் அதிகாரியாகவும், துணை அல்லது உதவி தேர்தல் ஆணையர் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியாகவும் செயற்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அனைத்து மாவட்ட செயலாளர்களும் நாளை கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.