
கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் மொனராகலை மாவட்டத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அத்தோடு, சந்தேகத்திற்குரிய பொலிஸ் அத்தியட்சகரின் வீட்டில் 15 கிலோ கஞ்சா செடிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளதோடு, மண்ணின் உட்பகுதியை கண்காணிக்கக்கூடிய இயந்திரம் ஒன்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளினால் குறித்த இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, குறித்த அதிகாரியுடன் மேலும் நான்கு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
அவர்களில் ஒருவர் பொலிஸ் உத்தியோகத்தர் எனவும் ஏனைய மூவரும் பொதுமக்கள் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்குமாறு பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் குழுவொன்று இன்று காலை மொனராகலைக்கு சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ மேலும் தெரிவித்தார்.