
ரம்புக்கன குளிமலுவ பிரதேசத்தில் இரண்டு இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் தற்போது பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் இவர்களை கைது செய்ய பல விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
மேலும், மாவனெல்லை கிரிங்கன்தெனிய மற்றும் கெரமினியா வத்தையில் வசிக்கும் இரண்டு இளைஞர்கள் ரம்புக்கன குளிமலுவ பிரதேசத்தில் போதைப்பொருள் வியாபாரி ஒருவரின் வீட்டின் பின்புறம் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாக மாவனெல்லை பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதன்படி, கேகாலை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஆய்வுகளை மேற்கொண்டதில், இளைஞர்களின் சடலங்கள் வீட்டின் பின்புறம் புதைக்கப்பட்டிருந்தமையும், அவற்றின் மீது கொங்கிறீட் மூடி வைக்கப்பட்டிருந்தமையும் தெரியவந்துள்ளது.
கேகாலை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த உரிய தகவல்களை கேகாலை நீதவான் நீதிமன்றில் அறிவித்ததன் பின்னர், உயிரிழந்தவர்களின் சடலங்களைத் தேடும் நடவடிக்கை நேற்று (12) காலை ஆரம்பிக்கப்பட்டது.
அதன்படி நேற்று பிற்பகல் உயிரிழந்த ஒருவரின் சடலமும், இன்று காலை அதே இடத்தில் மற்றையவரின் சடலமும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சடலங்கள் கேகாலை பொது வைத்தியசாலையின் தடயவியல் மருத்துவ வளாகத்திற்கு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், இந்தக் கொலைகளுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதால், அவர்களைக் கைது செய்ய விசேட பொலிஸ் குழுக்கள் பல நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும், தெரிவித்தார்.