
சீனாவில் கோவிட் பரவுவது குறித்த கூடுதல் தகவல்களை வழங்குமாறு உலக சுகாதார அமைப்பு சீனாவிடம் கேட்டுக் கொண்டதினைத் தொடர்ந்து நேற்று 60,000 கொரோனா இறப்புகள் என சீனா அறிவித்துள்ளது.
மேலும், சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் வெளிப்படுத்தியபடி, டிசம்பர் 8 முதல் ஜனவரி 12 வரை கோவிட் நோயால் பாதிக்கப்பட்ட 60,000 பேர் இறந்துள்ளனர். அவர்களில், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஏற்பட்ட சுவாசக் கோளாறு காரணமாக பலர் உயிரிழந்துள்ளதோடு, சீனாவின் தேசிய சுகாதார ஆணையம், பதிவான இறப்புகள் அனைத்தும் மருத்துவமனைகளில் இருந்து பதிவான இறப்புகள் என்று தெரிவித்துள்ளது.
அத்தோடு, சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வீடுகளில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் இன்னும் கொஞ்ச நாட்களில் அதிகரிக்கலாம் என்றும் தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்கள் தொடர்பில் சீனா வெளியிட்டுள்ள தகவல்களை ஏற்றுக் கொள்வதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானமும் கொரோனா தரவுகள் தொடர்பாக சீனாவின் ஒத்துழைப்பு மற்றும் வெளிப்படைத்தன்மையின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.