
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக, காலி மாவட்டத்தின் காலி மாநகர சபை உட்பட மாவட்டத்தின் அனைத்து உள்ளூராட்சி நிறுவனங்களுக்கும் போட்டியிடுவதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தலைமையில் இன்று கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.
இதேவேளை, பொலன்னறுவை மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களுக்கு போட்டியிடுவதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வைப்புத் தொகையை இன்று காலை வைப்பிலிட்டுள்ளது.
மேலும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புதல்வருமான தம்ம சிறிசேன தலைமையிலான குழுவினர், பிணைத் தொகையை அங்கு வைப்பிலிட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அத்தோடு, பொலன்னறுவை மாநகர சபை, பொலன்னறுவை பிரதேச சபை, திம்புலாகல பிரதேச சபை, வெலிகந்த பிரதேச சபை, லங்காபுர பிரதேச சபை, அலஹெர பிரதேச சபை, ஹிகுராக்கொட மற்றும் மத்திரிகிரிய பிரதேச சபைகளுக்கான பிணைப் பணத்தை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வைப்பிலிட்டுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அனைத்து மாவட்டங்களிலும் தனித்துப் போட்டியிடுவதற்கு நேற்றைய தினம் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக அதன் ஊடகப் பேச்சாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வீரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.