
அமைச்சராக பதவி வகித்து 75 மில்லியன் ரூபாவுக்கு மேல் சட்டவிரோதமாக வருமானம் ஈட்டியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை தொடர்ந்தும் நடத்த முடியுமா? இல்லையா? என பெப்ரவரி 28ஆம் திகதி தீர்ப்பு வழங்கப்படும் என கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.
மேலும், குறித்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்தோடு, பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச அரச ஊழியர் என அரசியலமைப்பின் கீழ் வரையறுக்கப்படாததால், இலஞ்ச ஊழல் சட்டத்தின் கீழ் அவருக்கு எதிராக இந்த வழக்கை தொடர முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் ஆரம்ப ஆட்சேபனைகளை முன்வைத்திருந்தனர்.
இதன்படி, இருதரப்பு சட்டத்தரணிகளும் ஆரம்ப எதிர்ப்பு தொடர்பான எழுத்துமூல உரைகளை இன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்ததாக குரு டிவி நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.
அதன் பிறகு இந்த வழக்கை தொடர முடியுமா? இல்லையா? என பெப்ரவரி 28ஆம் திகதி தீர்ப்பு வழங்கப்படும் என கொழும்பு மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
மேலும், 2010 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை அமைச்சராக கடமையாற்றிய போது 75 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான சொத்துக்கள் மற்றும் பணத்தை சட்டவிரோதமாக சம்பாதித்ததாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவிற்கு எதிராக இலஞ்ச சட்டத்தின் கீழ் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தமாய் குறிப்பிடதக்கது.