
மில்கோ நிறுவனம் மனித பாவனைக்குத் தகுதியற்ற 635 மெற்றிக் டன் பால் மாவை அனுமதியின்றி கால்நடை தீவனத்திற்காக ஒரு நிறுவனத்திற்கு விற்பனை செய்யவுள்ளமை தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்க விவசாய அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும், குறித்த பால் மாவை ஒரு நிறுவனத்திற்கு விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், ஆனால் அந்த நடவடிக்கைகளை உடனடியாக இடைநிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, விசாரணைக் குழுவொன்றை நியமிக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, விவசாய அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்திருந்தார். அதன் பிரகாரம், ஒரு நிறுவனத்திற்கு மாத்திரம் பால் மா கையிருப்பு விற்பனை செய்வதை நிறுத்துமாறு சம்பந்தப்பட்ட குழு பரிந்துரைத்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
இதையும் மீறி, மில்கோ நிறுவனத்தின் உயர் அதிகாரிகள், நிர்வாகக் குழுவின் ஒப்புதலின் பேரில், உரிய பால் பவுடரை தாங்கள் முடிவு செய்த நிறுவனத்துக்கு விற்பனை செய்துள்ளனர்.
மேலும், அமைச்சின் செயலாளரினால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் பரிந்துரைகளை புறக்கணித்து, மனித பாவனைக்கு தகுதியற்ற பால் மாவை ஒரு நிறுவனத்திற்கு விற்பனை செய்தமைக்கான காரணங்களை உடனடியாக சமர்ப்பிக்குமாறு விவசாய செயலாளர் கடிதம் மூலம் தெரிவித்துள்ளதோடு இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தவும் விவசாய அமைச்சு முடிவு செய்துள்ளது.