
(எஸ்.அஷ்ரப்கான்)
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சகல வட்டாரங்களையும் வென்று அட்டாளைச்சேனை பிரதேச சபையின் ஆட்சியினை கைப்பற்றும் என அக்கட்சியின் சார்பாக அல் முனீரா வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஏ.கே.அமீர் தெரிவித்தார்.
அல் முனீரா வட்டாரத்தில் இடம்பெற்ற பெண்களுக்கான கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
முஸ்லிம் சமூகத்திற்காக இந்த நாட்டிலே குரல் கொடுக்கின்ற ஒரே ஒரு தலைவர் ரிஷாட் பதியுதீன் மாத்திரமே, அதனாலே அவர் பல்வேறு சோதனைகளை எதிர்கொண்டு வருகிறார். மக்கள் நலனில் அக்கரை செலுத்துகின்ற ஒரு தலைவராக அவரைக்கானுகின்றேன். அதன் காரணமாகவே உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அந்தக்கட்சியின் சார்பில் போட்டியிடுகின்றேன். இப்பிரதேச மக்களுடைய அத்தனை பிச்சினைகளை தீர்க்க முடியும் என்கின்ற பெரும் நம்பிக்கை எனக்குள்ளது.
அகில இலகை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் ஆதரவு அதிகரித்து வருகின்றது. குறிப்பாக அம்பாரை மாவட்டத்தில் அதிகமான சபைகளை கைப்பற்றி ஆட்சியமைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அட்டாளைச்சேனை பிரதேசத்தில் சிறந்த ஆளுமையுள்ள பலமான அணியொன்றினை களமிறக்கியுள்ளோம்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் போட்டியிடுவதற்கு பொருத்தமான வேட்பாளர்கள் முன்வராமையினால் எமது கட்சியினரை வலைவீசினர். அந்தளவிற்கு அந்தக்கட்சி வங்குறோத்து நிலையை அடைந்துள்ளது. ஒரு வட்டாரத்திலுள்ளவரை இன்னுமொரு வட்டாரத்தில் நிறுத்தி போட்டியிடச் செய்துள்ளனர். வட்டாரத்தில் அறிமுகமில்லாதவர்களுக்கும், சம்மந்தமில்லாதவர்களுக்கும் மக்கள் எவ்வாறு வாக்களிப்பது. பாட்டுக்களைப் போட்டு வாக்குகளை சூறையாடலாம் என அவர்கள் இன்னும் கங்கனம் கட்டிக்கொண்டிருக்கின்றனர். அந்தக்காலம் மலையேறிவிட்டது.
கடந்த முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வெற்றிபெற்று அட்டாளைச்சேனை பிரதேச சபையில் ஆட்சி அதிகாரங்களை கொண்டிருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்தப் பிரதேசத்தில் எந்தவொரு காத்திரமான பணிகளையும் செய்யவில்லை. அவர்கள் சபையில் கூடி கலைந்தார்களே தவிர மக்கள் நலன் சார்ந்த எந்தவொரு திட்டமிடல்களையும் மேற்கொள்ளவில்லை. எனவே நடைபெறப் போகின்ற தேர்தலில் அட்டாளைச்சேனை பிரதேச மக்கள் அவர்களுக்கு தக்கபாடம் புகட்ட வேண்டும் என்றார்.