
(எஸ்.அஷ்ரப்கான்)
ஆராய்ச்சியாளர்கள் நடைமுறை பிரச்சினைகளுக்கு ஆய்வுகளை மேற்கொண்டு அதன் ஊடாக நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுக்க வேண்டும் என தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் தெரிவித்தார்.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் பொருளாதாரம் மற்றும் பொருளாதாரத்துறை, வேளாண்மை பொருளாதாரத் துறைகள் கூட்டாக நடாத்திய இலங்கை மன்றத்தின் 11வது ஆய்வரங்கு (03) நல்லைய்யா கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.
கிழக்குப் பல்கலைக்கழக விவசாய பீடத்தின் பீடாதிபதி கலாநிதி மயில்வாகனம் பத்திநாதன் தலைமையில் நடைபெற்ற இவ்வாய்வரங்கில் கிழக்குப் பல்கலைக்கழக விவசாய பீடத்தின் “இலங்கையின் பொருளாதாரத்தில் சமகால சர்ச்சைகள் மற்றும் சங்கடங்கள்” எனும் தொனிப் பொருளில் விடயங்கள் ஆராயப்பட்டது.
இந்நிகழ்வுக்கு கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் வேலுப்பிள்ளை கணகசிங்கம் பிரதம அதிதியாகவும்,
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் கெளரவ அதிதியாக கலந்து கொண்டார்.
இதில் கலந்து கொண்டு உரையாற்றிய உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் மேலும் அங்கு உரையாற்றும் போது, இலங்கையில் தற்காலத்தில் நிலவுகின்ற பொருளாதாரப் பிரச்சினை காரணமாக நமது நாடு பல்வேறுபட்ட பிரச்சினைகளை அனுபவித்து வருகிறது.
இதன் காரணமாக நாடு இப்பொருளாதார நெருக்கடியில் இருந்து தீர்வு காண்பதற்காக இலங்கை சர்வதேச நாணய நிதியத்திடம்
(IMF) நிதியை பெற்றுக்கொள்வதற்கு உடன்படிக்கை செய்யவுள்ளது.
இவ்வாறான நடவடிக்கைகள் மூலமாக முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பெறுவதுடன், நாடு முன்நோக்கி நகர்வதற்கான அறிகுறிகள் தென்படுகின்றது.
ஆராய்ச்சியாளர்களுக்கு கடப்பாடுகள் மற்றும் சில பொறுப்புகள் காணப்படுகின்றன. ஆகவே ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுகளை மேற்கொண்டு இந்த நாட்டை முன்நோக்கி நகர்த்துவதற்கான பங்களிப்புகளை செய்ய வேண்டியதுள்ளது எனவும் தெரிவித்தார்
ஆராய்ச்சியாளர்கள் எப்போதும் ஒரு குறுகிய வட்டத்தில் ஆராய்ச்சி செய்வதை விடுத்து, விரிவான துறைகளில் துணை சேர்ந்த அமைப்புக்கள் ஒருங்கிணைந்து ஆராய்ச்சிகளில் ஈடுபட வேண்டும்.
ஆராய்ச்சியாளர்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உந்து சக்தியாக இருக்க வேண்டும். அந்த வகையில் ஆராய்ச்சியாளர்களின் ஆய்வுகள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்புச்செய்ய வேண்டும்.
ஆராய்ச்சியாளர்கள் சிறந்த முறையில் தங்களது ஆராய்ச்சி முடிவுகளை வெளிப்படுத்துவதற்கு இது ஒரு சிறந்த கலமாகும்.
என்றும் தெரிவித்தார்.
இந்நிகழ்வின் சிறப்பு பேச்சாளராக பேராசிரியர் ஷான்டா தேவராஜன், ஜோஜ்டொன் பல்கலைக்கழகம்-
அமெரிக்கா முதன்மைப் பேச்சாளராக சூம் தொழில்நுட்பம் ஊடாக உரையாற்றினார்.
இங்கு “ஆய்வு சஞ்சிகையின் முதல் பிரதியை கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் வேலுப்பிள்ளை கணாகசிங்கம் மற்றும் தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் அவர்களுக்கு விவசாய பீடத்தின் பீடாதிபதி மயில்வாகனம் பத்திநாதன் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.
இங்கு பீடாதிபதிகள், நூலகர், திணைக்களத் தலைவர்கள், பேராசிரியர்கள், சிரேஷ்ட விரிவுரையாளர்கள், நிருவாக உத்தியோகத்தர்கள், கல்விசாரா ஊழியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.