
வரி செலுத்தத் தவறிய நபர்கள் மற்றும் பணியாளர்களை அடையாளம் காண உள்ளூர் நிர்வாக பிரிவுகளுக்கும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கும் இடையில் ஒருங்கிணைக்கப்பட வேண்டுமென நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும், அரச நிருவாக உத்தியோகத்தர்களின் ஒன்றியத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர்களும் அதற்கான ஆதரவை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்ததாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதோடு, இதே கலந்துரையாடலில், நாடு பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள இவ்வேளையில் தனிமைப்படுத்தப்பட்ட தீர்மானங்களை எடுப்பது தீங்கானது எனவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளதோடு, சர்வதேச நாணய நிதியம் மற்றும் கடன் வழங்கும் நாடுகளின் பிரேரணைகளுக்கு சவால் விடுக்காமல் தீர்மானங்களை எடுக்க வேண்டும் எனவும் இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, பிரபலமாகும் தீர்மானங்களை எடுப்பதற்கு பதிலாக நாட்டின் எதிர்காலம் குறித்து சிந்தித்து முக்கிய தீர்மானங்களை எடுப்பதே அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்பதோடு தேர்தல் காலத்தில் நாட்டின் நெருக்கடிகளை சிலர் வேடிக்கை பார்ப்பது வருந்தத்தக்கது எனவும் இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தோடு, தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண எந்தவொரு தரப்பினரும் ஏதாவது வேலைத்திட்டத்தை முன்வைத்தால், அரசாங்கமோ அல்லது நிர்வாகமோ அவர்களிடம் கையளிக்க தயாராக இருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த கலந்துரையாடலில் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் நீல் பண்டார ஹபுஹின்ன உள்ளிட்ட அதிகாரிகள் குழுவும் கலந்துகொண்டனர்.