
தேர்தல்கள் ஆணைக்குழுவின் வகிபாகம் தொடர்பில் ஆராய்வதற்காக பாராளுமன்ற தெரிவுக்குழுவை உடனடியாக நியமிக்குமாறு கோரி 14 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கடிதம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
மேலும், சில செயற்பாடுகள் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும், அதன் அடிப்படையில் தெரிவுக்குழுவொன்றை நியமிக்க வேண்டும் எனவும் கோரி பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு சபாநாயகரிடம் கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மிலன் ஜயதிலக, சஹான் பிரதீப், சுதர்சன் தெனிபிட்டிய, கோகிலா குணவர்தன, திஸ்ஸ குட்டியாராச்சி, உபுல் ராஜபக்ஷ உள்ளிட்ட 14 எம்.பி.க்கள் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
மேலும், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான விடயங்கள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய தேர்தல்கள் ஆணைக்குழு தவறியுள்ளதாகவும், அவ்வாறான தேர்தலை நடத்துவதற்கான அனைத்து நிபந்தனைகளையும் திருப்திப்படுத்த முடியாது எனவும் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்தோடு, தேர்தல் ஆணைக்குழுவின் நடவடிக்கையினால் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகள் மீறப்பட்டிருந்தால் அது தொடர்பில் ஆராய்ந்து தகுந்த பரிந்துரைகளை வழங்குமாறும் அக்கடிதத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.