
மின்சாரக் கட்டணத்தை 36 வீதத்தால் அதிகரிப்பதற்கான தாம் முன்வைத்த யோசனையை தமது ஆணைக்குழுவின் ஏனைய மூவரும் நிராகரித்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும், மின்சார சபையினால் முன்மொழியப்பட்ட 66 வீத மின் கட்டண உயர்வை மூன்று உறுப்பினர்களும் அங்கீகரித்ததாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.
அத்தோடு, மின்சார நுகர்வோர் மீது வருடாந்தம் 287 பில்லியன் ரூபா கூடுதல் சுமையை சுமத்துவதற்கு மின்சார சபை முன்வைத்த யோசனையை ஆணைக்குழுவின் தலைவர் மீளாய்வு செய்து அதனை நியாயமான 142 பில்லியன் ரூபாவாக குறைத்திருந்தார்.
ஆனால் ஏனைய மூன்று உறுப்பினர்களான சட்டத்தரணிகளான சதுரிகா விஜேசிங்க, டக்ளஸ் நாணயக்கார மற்றும் எஸ். ஜி.சேனாரத்ன ஆகியோர் சட்டக் கட்டண முன்மொழிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்ததாக ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்தார்.
மேலும், குறித்த உறுப்பினர்களால் இன்று முதல் அமுல்படுத்தப்படும் கட்டண முறை சட்டவிரோதமானது, பொதுமக்களை கடும் அழுத்தத்திற்கு உள்ளாக்குவதுடன் ஒட்டுமொத்த பொருளாதாரத்திலும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதோடு உயர் மின் கட்டண பிரேரணையை அங்கீகரித்த ஆணைக்குழுவின் எஞ்சிய உறுப்பினர்கள் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு சட்டம் மற்றும் இலங்கை மின்சார சட்டத்தின் விதிகளை மீறியுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மின்சார கட்டண அதிகரிப்பு தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கும் மின்சார சபைக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலும் இணக்கப்பாடு இன்றி நிறைவடைந்துள்ளது.
அத்தோடு, பாராளுமன்றத்தில் நேற்று தேசிய சபை கூடிய போது இலங்கை மின்சார சபை அதிகாரிகள் இதனை தெரிவித்ததாக பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பில் சம்பந்தப்பட்ட 02 தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடி இறுதித் தீர்மானம் எடுக்குமாறு தேசிய சபை அண்மையில் அறிவித்திருந்தது. இதன்படி கடந்த 13ஆம் திகதி இரு பிரிவுகளின் அதிகாரிகளும் கூடி மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பில் கலந்துரையாடியதுடன், இறுதித் தீர்மானம் எட்டப்படவில்லை என இலங்கை மின்சார சபை அதிகாரிகள் தேசிய சபைக்கு அறிவித்துள்ளனர்.
இதன்படி, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நேற்றைய தினம் கூடி இது தொடர்பில் கலந்துரையாடி இறுதித் தீர்மானம் எடுக்கவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவ்வாறானதொரு பின்னணியிலேயே தலைவரினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அதன் மூன்று உறுப்பினர்களும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
மேலும், முன்னதாக, தேசிய சபை கூடிய போது, மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பான இறுதித் தீர்மானம் இன்றைக்கு முன்னதாக அறிவிக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தது.
அத்தோடு, இன்று இது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் என நம்புவதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்திருந்தார்.