
தமது ஆணைக்குழுவின் மூன்று அங்கத்தவர்கள் முன்வைத்த பிரேரணையின் பிரகாரம் மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க முடியாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மின்சாரக் கட்டணத்தை 36 வீதத்தால் அதிகரிப்பதற்கு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு முன்வைத்த யோசனையை ஆணைக்குழுவின் மூவரும் நிராகரித்திருந்தனர்.
மாறாக மின்சார சபையினால் முன்மொழியப்பட்ட மின் கட்டணத்தை 66 வீதத்தால் அதிகரிக்க முன்வந்திருந்தனர். ஆனால் இது சரியான முறையில் தயாரிக்கப்படாத பிரேரணை என்பதால் அதனை அங்கீகரிக்க முடியாது என மேற்படி ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கான தனது பிரேரணையில் மின்சார சபையினால் கோரப்பட்ட 66 வீத மின்சாரக் கட்டணம் தொடர்பில் எவ்வித விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, முறையான நடைமுறையில் இருந்து விலகி தனது ஆணைக்குழுவின் மூன்று உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு உடன்பட முடியாது என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கும் மின்சார சபைக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலும் இணக்கப்பாடு இன்றி நிறைவடைந்திருந்தது.