
வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக எதிர்வரும் பருவத்திற்கு தேவையான மண் உரம் தற்போதைய சந்தை விலையை விட குறைந்த விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
மேலும், விவசாய பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அத்தோடு, தண்டு மஞ்சள் நோயைத் தடுப்பது, உரமிடுதல் உத்திகள் மற்றும் நெல் விற்பனையில் உள்ள சிக்கல்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டதோடு விவசாயிகள் மண் உரங்களைப் பயன்படுத்தாததே மஞ்சள் நோய் ஏற்படுவதற்கு முக்கியக் காரணம் என விவசாயத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், இக்கலந்துரையாடலில் எதிர்வரும் பருவத்தில் இந்நோய் வராமல் தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, கரிம மற்றும் இரசாயன உர நிறுவனங்கள் பல்வேறு கண்ணோட்டத்தில் உரப் பயன்பாட்டை ஊக்குவித்து வருவதாகவும், இதில் பணியாற்றும் பல்வேறு அறிஞர்கள் மற்றும் நிறுவனங்கள் ஒரே கண்ணோட்டத்தில் இணைந்து செயல்படுவது நல்லது என்றும் இக் கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.