
மின்சார சபையின் கட்டண திருத்தம் அமுல்படுத்தப்பட்டதையடுத்து, தற்போதைய மின்வெட்டு இன்று முதல் நிறுத்தப்படும் என இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
மேலும், .சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டமை மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கான தீர்மானத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, கட்டண அதிகரிப்புடன் சர்வதேச நாணய நிதியத்தின் செயற்பாடுகள் இலகுவாகும் என இங்கு தெரிவிக்கப்பட்டது.
அத்தோடு,புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை அமுல்படுத்துவதுடன், எதிர்வரும் ஜூலை மாதம் மீண்டுமொரு மின் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர இந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், கடந்த 12 மாதங்களில் மாத்திரம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு கிட்டத்தட்ட 40 பில்லியன் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மின்சார பாவனையாளர்களுக்கு தொடர்ச்சியான மின்சாரத்தை வழங்குவதற்காக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட மின்சார சபையின் கட்டண திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் மற்றும் அது தொடர்பான அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதோடு குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குமாறும், மத ஸ்தலங்கள் மற்றும் அரச கல்வி நிலையங்களுக்கு சூரிய மின் தகடுகளை வழங்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.