
சம்மாந்துறையில் பூப்பந்தாட்ட விளையாட்டினை முன்னேற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கோடு அனைத்து கழக வீரர்களையும் உள்ளடக்கியதாக துறையூர் விளையாட்டுக் கழகத்தினால் ஏற்பாடு செய்து நடாத்தப்பட்ட மாபெரும் பூபந்தாட்ட பயிற்சி முகாம் 2023/2/17ம் திகதி வெள்ளிக்கிழமை சம்மாந்துறை ஜனாதிபதி விளையாட்டு கட்டிடத் தொகுதியில் அமைந்துள்ள பூப்பந்தாட்ட விளையாட்டரங்கில் துறையூர் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் ஏ.ஆர்.எம். மனாஸ் அவர்களின் தலைமையில் பிற்பகல் 4.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் கலந்து சிறப்பித்திருந்தார். அத்துடன் பிரதம அதிதிகளாக OCD அமைப்பின் தலைவர் அஸ்மி யாசின் மற்றும் துறையூர் விளையாட்டுக் கழகத்தின் ஸ்தாபகத் தலைவர் எம்.டீ.எம்.ரிஷா தற்போதைய தலைவர் ஏ.ஆர்.எம். மனாஸ் ஆகியோரோடு பூப்பந்தாட்ட வளவாளர்களான எல்.சுகேசன்,பி.வசந்த் , ஏ.றியாஸ் கராத்தே பயிற்சியாளர் ஏ.இர்ஷாத் சம்மாந்துறை கிரிக்கெட் அசோசியேசன் தலைவர் எம்.வை.எம்.அனீஸ் ஆகியோரோடு கடந்த காலங்களில் துறையூர் மண்ணுக்கு பூப்பந்தாட்டத்தின் மூலம் பல வெற்றிகளைத் தேடித்தந்த முனசிர் , ஹஸான் மற்றும் யுஸ்ரி ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.
இந் நிகழ்வின் ஆரம்பமாக மத அனுஷ்டானம் அனுஷ்டிக்கப்பட்டதோடு வரவேற்பு உரையினை துறையூர் விளையாட்டுக் கழகத்தின் ஸ்தாபகத் தலைவர் எம்.டீ.எம்.ரிஷா நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து விசேட அதிதியாக வருகை தந்திருந்த OCD அமைப்பின் தலைவர் அஸ்மி யாசின் உரை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து பிரதம அதிதியாக வருகை தந்திருந்த பிரதேச சபையின் தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் அவர்களினால் உரை நிகழ்த்தப்பட்டது. பின்னர் ஜெசிம் அவர்களினால் வருகை தந்திருந்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப் பட்டதோடு பயிற்சி வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டது.
இதில் பூப்பந்தாட்ட வளவாளர்களாக கலந்து கொண்ட எல்.சுகேசன்,பி.வசந்த் மற்றும் ஏ.றியாஸ் ஆகியோரினால் பூப்பந்தாட்ட விதிமுறைகள், பயிற்சிகள் , பயிற்சியின் நுனுக்கங்கள் என பலவற்றினை கற்றுக் கொடுத்திருந்தார்கள். இந்நிகழ்வில் சுமார் 35 க்கும் மேற்பட்டோர் கலந்து பயன்பட்டதோடு துறையூர் விளையாட்டுக் கழகம் இது போன்ற நிகழ்வுகளளை தொடர்ச்சியாக சகல விளையாட்டுக்களுக்கும் நடாத்த வேண்டும் என்ற கோரிக்கையினையும் வருகை தந்திருந்தவர்கள்முன் வைத்திருந்தார்கள்.
இந்நிகழ்வுக்கும் வருகை தந்து சிறப்பித்திருந்த பிரதம அதிதி மற்றும் விசேட அதிதிகள் வளவாளர்கள் கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் அனைத்து கழக உறுப்பினர்களுக்கும் விளையாட்டு வீரர்களுக்கும், பொதுமக்களுக்கும் துறையூர் விளையாட்டுக் கழகத்தின் சார்பாக இதயம் கனிந்த நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.