
அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் சில நிமிடங்களுக்கு முன்னர் உக்ரைன் விஜயம் செய்துள்ளார்.
மேலும், அமெரிக்கா ஜனாதிபதியின் இந்த விஜயம் இறுதி நேரம் வரை இரகசியமாக திட்டமிடப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
அத்தோடு, ரஷ்யா உக்ரைன் மீதான படையெடுப்பை ஆரம்பித்து ஒரு வருடத்தை நிறைவு செய்யும் தினத்தில் அமெரிக்க ஜனாதிபதி உக்ரைன் வந்துள்ளமை விசேட அம்சமாகும்.
இதன்படி, நீண்ட தூர ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுதங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ள நிலையில் அமெரிக்க ஜனாதிபதி மற்றும் உக்ரைன் ஜனாதிபதிக்கு இடையில் சந்திப்பொன்றும் இடம்பெற்றுள்ளது.
மேலும், “கடந்த ஆண்டில், இராணுவம், பொருளாதார மற்றும் மனிதாபிமான ஆதரவுடன் உக்ரைனைப் பாதுகாக்க அட்லாண்டிக் முதல் பசிபிக் வரையிலான நாடுகளின் கூட்டணியை அமெரிக்கா உருவாக்கியுள்ளதாகவும் குறித்த ஆதரவானது தொடருமெனவும் ” அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, அமெரிக்கா அதிபரை ஏற்றிச் சென்ற வாகனத் தொடரணி உக்ரைன் தலைநகர் கீவ் நகருக்கு வந்தபோது,நாகரமானது பூட்டப்பட்டிருந்ததாகவும், வான்வழித் தாக்குதல்களின் ஆபத்தை உணர்த்தும் சைரன்கள் தொடர்ச்சியாக ஒலிக்கப்பட்டதாகவும் அந்நாட்டின் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, அமெரிக்க ஜனாதிபதியின் உக்ரைன் விஜயம் காரணமாக நேட்டோ அமைப்பு தமது வான் தாக்குதல் படையை உஷார் நிலையில் வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.