
எதிர்பார்த்தபடி மார்ச் மாதத்தில் சர்வதேச நிதி ஒதுக்கீடு கிடைக்காவிடின் நாட்டின் அத்தியாவசிய செலவுகளுக்காக கையிருப்பு வைத்திருக்க வேண்டியிருக்கும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும், நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கும் இந்த நேரத்தில் நாட்டின் செலவினங்களை கவனமாக திட்டமிட வேண்டும் என மேலும் ஜனாதிபதி டுவிட்டர் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தோடு, நாட்டில் தற்போது திட்டமிடப்பட்டுள்ள அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஒரேயடியாக பணத்தை விடுவிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், நாட்டின் பொருளாதார அழிவுக்கு யார் காரணம் என்பது குறித்து தெரிவுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்ற கருத்தோடு தானும் உடன்படுவதாக ஜனாதிபதி வலியுறுத்தினார்.
இது தொடர்பான நடவடிக்கைகளை மார்ச் மாதம் 3ஆம் வாரத்திற்குள் மேற்கொள்ளுமாறு பிரதமருக்கு அறிவித்துள்ளதாக ஜனாதிபதி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.