
துறைமுக நகரத்தில் புதிய சட்டங்களை மேம்படுத்துவதற்கான குழுவொன்றை ஸ்தாபிக்குமாறு இளம் சட்டத்தரணிகள் குழுவொன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் யோசனையொன்றை சமர்ப்பித்துள்ளது.
மேலும், கொழும்பு றோயல் கல்லூரி சட்டத்தரணிகள் சங்கத்தின் வருடாந்த பொதுக் கூட்டத்தில் சட்டத்தரணிகள் குழுவொன்று ஜனாதிபதியிடம் குறித்த கோரிக்கையை முன்வைத்திருந்தது.
இதன்படி, கடல்சார் பொருளாதார சட்டம் தொடர்பான நிபுணத்துவத்தை பெற்றுக்கொள்ளுமாறும் துறைமுக நகரத்தில் புதிய சட்டங்களை மேம்படுத்துவதற்கான குழுவொன்றை நிறுவுமாறும் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்தோடு, புதிய துறைமுக நகரமானது கடல்சார் பொருளாதார சட்டத்துடன் கூடிய நிதி மையமாக அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளதோடு துறைமுக நகரத்தை நிதி மையமாக மாற்றுவது தொடர்பான சட்டத் துறைகளில் ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் இளம் சட்டத்தரணிகளை ஊக்குவித்துள்ளார்.
மேலும், நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கு மக்கள் விரும்பத்தகாத கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, அந்த நோக்கத்திற்கான தனது அர்ப்பணிப்பை விளக்கிய அவர், ஒரு அரச மாணவராக சவால்களை எதிர்கொள்ளும் தைரியத்தை தாம் பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
அத்தோடு, இலங்கையில் சட்டத்துறைக்காக றோயல் கல்லூரி ஆற்றிய பணிகளுக்கு பாராட்டுக்களை தெரிவித்ததாகவும் இதன்போது சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம் மற்றும் ரோயல் கல்லூரியின் அதிபர் ஆகியோரும் கலந்துகொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.