
இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் கடவுச்சீட்டு தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு இன்று அழைக்கப்பட்ட போது இருதரப்பு சட்டத்தரணிகளுக்கு இடையில் கடுமையான வார்த்தைப் பரிமாற்றம் இடம்பெற்றுள்ளது.
இதன்படி இந்த முறைப்பாடு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, டயானா கமகேவின் சார்பில் வாதாடிய ஜனாதிபதி சட்டத்தரணி சவீந்திர பெர்னாண்டோ மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க உள்ளிட்ட சட்டத்தரணிகளுக்கு இடையில் காரசாரமான வார்த்தைப் பரிமாற்றம் இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மேலும், இராஜாங்க அமைச்சர் டயானா காமின் குடியுரிமை மற்றும் கடவுச்சீட்டு தொடர்பான விசாரணைகள் தொடர்பில் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து வாக்குமூலங்களின் பிரதிகளையும் எதிர்வரும் 23ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு இன்று உத்தரவிட்டுள்ளார்.
அத்தோடு, இந்த நடவடிக்கைகளுக்கு சட்டமா அதிபரின் உதவியை நாட தீர்மானித்துள்ளதாக தெரிவித்த பிரதம நீதவான், இது தொடர்பில் சட்டமா அதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பவுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், சட்டமா அதிபரின் ஆதரவைப் பெறுவதன் மூலம் இந்த வழக்கு தொடர்பான பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என நீதவான் திறந்த நீதிமன்றில் தெரிவித்தார்.
பின்னர் புகார் மனுவை வரும் 23 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.