
சர்வதேச நாணய நிதியத்திற்கான கடன் விண்ணப்பத்தில் இலங்கைக்கு ஆதரவளிப்பதாக சீனாவின் ஏற்றுமதி-இறக்குமதி வங்கி உறுதியளித்துள்ளது. சீன வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் தினசரி செய்தியாளர் சந்திப்பில் இந்தக் கருத்துக்களை தெரிவித்தார்.
மேலும், சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கி இலங்கையின் நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சுக்கு நிதி உதவி ஆவணம் ஒன்றையும் வழங்கியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதன்படி, இலங்கையில் குறுகிய கால கடனை திருப்பிச் செலுத்தும் அழுத்தத்திலிருந்து விடுபட 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் செலுத்த வேண்டிய கடன் சேவையை நீட்டிக்க சீன எக்சிம் வங்கி தயாராக இருப்பதாக அந்தக் கடிதத்தில் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இலங்கையில் கடன் மறுசீரமைப்பு குறித்தும் அவரிடம் கேட்கப்பட்டது.
அத்தோடு, இதற்குப் பதிலளித்த அவர், சர்வதேச இறையாண்மைப் பத்திரம் வைத்திருப்பவர்கள் உட்பட வணிகக் கடன் வழங்குநர்களுடன் ஒப்பிடக்கூடிய அடிப்படையில் தங்கள் அதிகபட்ச பங்களிப்பை வழங்க பலதரப்பு கடனளிப்பாளர்களை சீனா எக்ஸிம் வங்கி தொடர்ந்து வலியுறுத்தும் என்று தெரிவித்தார்.
மேலும், கடன் நிலைத்தன்மையை அடைவதில் இலங்கைக்கு ஆதரவளிக்க சீனா உண்மையாக தயாராக இருப்பதாகவும், கடன் மறுசீரமைப்பு செயல்முறையை தீவிரமாக செயல்படுத்துவதில் தொடர்புடைய நிதி நிறுவனங்களுக்கு சீனா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றும் அவர் கூறினார்.
இதன்படி, இலங்கையின் தற்போதைய நிலைமையை சமாளிப்பதற்கும், அதன் கடன் சுமையை குறைப்பதற்கும், நிலையான அபிவிருத்தியை அடைவதற்கும் சாதகமான பங்கை வகிக்க, சம்பந்தப்பட்ட நாடுகள் மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்களுடன் இணைந்து சீனா செயற்படும் என சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மாவோ நிங் மேலும் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், இருதரப்புக் கடன்கள் தொடர்பில் சீனாவுடன் உடன்பாடு எட்டப்படும் வரை இலங்கை சர்வதேச நாணய நிதியத்துடன் கடன் திட்டத்தில் ஈடுபட முடியாது என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.
மேலும், சர்வதேச நாணய நிதியத்துடனான கடன் வேலைத்திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கு, இலங்கையின் கடன்களுக்காக குறைந்தது 10 வருடங்கள் கடன் நிவாரண காலத்தை வழங்குவதற்கு சீனா உடன்பட வேண்டும் என பேராசிரியர் வசந்த அத்துகோரள சுட்டிக்காட்டியுள்ளார்.