
மாளிகைக்காடு நிருபர்
கல்முனை மாநகர சபை வரிப்பண ஊழலில் சம்பந்தப்பட்டவர்களை எவ்வித தயவு தாட்சணையுமின்றி சட்டத்தின் முன் நிறுத்த கல்முனை மாநகர சபை சகல விடயங்களையும் செய்துள்ளது. கல்முனை முதல்வர், ஆணையாளர், உறுப்பினர்களாகிய நாங்கள் இந்த விடயத்தில் கடும் பிரயத்தனங்களை செய்து வருகின்றோம். ஊழலில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவறிவிட்டதாக சம்பந்தமில்லாத அறிக்கைகளை விட்டு இதில் அரசியல் செய்ய முனைபவர்களுக்கு கடைசியில் ஏமாற்றமே மிஞ்சும் என கல்முனை மாநகர சபை உறுப்பினரும், சுகாதார குழுவின் தலைவருமான சட்டத்தரணி ரோஷன் அக்தர் தெரிவித்தார்.
கல்முனை மாநகர ஊழல் விடயங்கள் தொடர்பில் ஊடகவியலாளர்களிடம் இன்று (03) விளக்கமளித்த அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில் கஷ்டப்பட்டு வரிப்பணம் செலுத்தும் கல்முனை மக்களின் வரிப்பணத்தை சுரண்டிச் செல்ல யாரையும் அனுமதிக்க முடியாது. ஊடகங்களுக்கு அறிக்கை விடுவதை பார்க்கிலும் ஊழல்வாதிகளை கைதுசெய்யவேண்டிய தேவையே எங்களுக்கு முதன்மையாக உள்ளது. இதனை வைத்து மாநகர நிர்வாகத்தின் மீது காழ்ப்புணர்ச்சி கொண்ட சிலர் அரசியல் செய்யப்பார்க்கிறார்கள்.
ஊழல் குற்றசாட்டு சுமத்தப்பட்டுள்ளவர்கள் விரைவில் கைது செய்யப்பட வேண்டும் என்பதிலும் அவர்கள் முறையாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு அவர்களின் விசாரணையின் போது இந்த ஊழலில் கல்முனை மாநகர சபை அதிகாரிகள் மற்றும் உயரதிகாரிகள் அல்லது வேறு பலரும் தொடர்புபட்டிருப்பதாக வாக்கு மூலம் வழங்கினால் அவர்களும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு தண்டனை பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
கல்முனை மாநகர சபையை ஆளும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்த விடயம் தொடர்பில் மிகவும் நிதானமான புத்திகூர்மையான நகர்வுகளை செய்து கொண்டிருக்கிறோம். ஊழல்வாதிகளை கைது செய்து மக்களின் வரிப்பணம் காப்பற்றப்பட வேண்டும் என்பதில் தலைவர் ரவுப் ஹக்கீம் அவர்களும், தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களும் முனைப்புடன் இருக்கிறார்கள். எங்களுக்கு தேவையான ஆலோசனைகளையும், வழிகாட்டல்களையும் அவர்கள் தொடர்ந்தும் வழங்கி கொண்டிருக்கிறார்கள். ஆணையாளரின் நிர்வாக செயற்பாடுகளுக்கு கல்முனை மாநகர சபை முதல்வர், உறுப்பினர்கள், நிர்வாகிகளின் ஒத்துழைப்பு தொடர்ந்தும் வழங்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது.
பொலிஸாரும், நீதிமன்றமும் ஊழல்வாதிகளுக்கு தகுந்த தண்டனையை வழங்குவார்கள். அவர்களுக்கு எதிரான சட்டநடவடிக்கை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த ஊழல் குற்றசாட்டுக்களை வைத்து யாரும் குளிர்காய தேவையில்லை என்றார்.