
வெளிநாட்டு வேலைகளுக்கு அனுப்புவதாக கூறி பணத்தினை பெற்றுக் கொள்ளும் நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இவ்வாறான ஆட்கடத்தல்காரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதில் அரசியல் செல்வாக்கு இல்லை எனவும், நாட்டில் தற்போதுள்ள சட்டத்திற்கு முரணாக செயற்படும் எந்தவொரு நபரையும் பாதுகாப்பதற்கு அமைச்சரோ அல்லது அமைச்சரின் பணியாளர்களோ செயற்பட மாட்டார்கள் எனவும் பணியகம் தெரிவித்துள்ளது.
மேலும், அமைச்சர் அல்லது அமைச்சரின் ஊழியர்களின் பெயர்களை பயன்படுத்தி வெளிநாட்டு வேலை வழங்குவதாக கூறி பணம் வசூலிக்கும் ஆட்கடத்தல்காரர்கள் பற்றிய தகவல்களை வழங்குமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அமைச்சின் அல்லது வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் கடிதத் தலைப்பில் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் வழங்கப்படுமெனக் கூறி கடிதங்கள் வழங்கப்பட மாட்டாது என சுட்டிக்காட்டியுள்ள மேற்படி பணியகம் அவ்வாறான கடிதங்களை வழங்கியவர்கள் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
அத்தோடு, பதிவு செய்யப்பட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களினால் மாத்திரமே வெளிநாட்டு வேலைகளுக்கு ஆட்களை அனுப்ப முடியும் எனவும், அவ்வாறான அனுமதிப்பத்திரம் இல்லாத எவருக்கும் வெளிநாட்டு வேலைகளுக்கு ஆட்களை அனுப்புவதற்கு சட்டரீதியான அனுமதி கிடையாது எனவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.