
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் காவல்துறையால் கைது செய்யப்படுவார் என்ற பயத்தில் தலைமறைவாகிவிட்டதாக பாகிஸ்தான் அரசு குற்றம் சாட்டியுள்ளது.
மேலும், லாகூரில் உள்ள இம்ரான் கானின் தனியார் வீட்டிற்கு இஸ்லாமாபாத் காவல் நிலைய அதிகாரிகள் சென்றபோது, அவர் வீட்டின் சுவரில் இருந்து குதித்து பக்கத்து வீட்டில் ஒளிந்து கொண்டதாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ராணா சனாவுல்லாஹ் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், இம்ரான் கான் வீட்டில் இல்லாததால், பொலிஸ் அதிகாரிகள் திரும்பி வந்ததாகவும் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, கைது செய்யப்படாமல் இருக்க இம்ரான் கான் நாடகம் ஆடுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளதோடு நீதிமன்ற உத்தரவுகளை தெரிவிக்கவே இம்ரான் கானின் வீட்டிற்கு பொலிஸார் சென்றதாகவும், பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் குற்றம்சாட்டினார்.
அத்தோடு, இம்ரானை கைது செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டால் பொலிஸார் தயங்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பிரதமராக இருந்த காலத்தில் வெளிநாடுகளில் இருந்து பெற்ற பரிசுகளை தவறாக பயன்படுத்தியதுதான் அவருக்கு எதிரான முக்கிய குற்றச்சாட்டு எனவும் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.