
முன்னதாக ஒவ்வொரு வாரமும் ஞாயிறு நள்ளிரவில் புதுப்பிக்கப்பட்ட எரிபொருள் QR ஒதுக்கீடு இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒவ்வொரு செவ்வாய்கிழமையும் நள்ளிரவில் புதுப்பிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், வார இறுதி நாட்களில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனையத்தில் எரிபொருள் விநியோகச் செலவுகளைக் குறைப்பதற்காக, எரிபொருள் ஒதுக்கீட்டுத் திகதி திருத்தப்பட்டுள்ளது.
மேலும், QR கோட்டாவின் ஊடாக வாரத்திற்கு வழங்கப்படும் எரிபொருளில் எவ்வித மாற்றமும் ஏற்படாது என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தனது டுவிட்டர் பதிவில் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மின்சார கட்டண திருத்தம் தொடர்பில் இன்றும் பாராளுமன்றத்தில் பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டதோடு ஒரு குழுவினருக்கு அநீதி இழைக்கும் வகையில் மின்சாரக் கட்டணம் திருத்தப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கருத்து தெரிவித்த்ர்த்துள்ளார்.
மேலும், இதற்குப் பதிலளித்த மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, மின்சார சபையை மறுசீரமைக்கும் திட்டம் ஒரு மாதத்திற்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் எதிர்க்கட்சிகள் ஆதரவளித்தால் ஜூலை மாதம் மின் கட்டணத்தை குறைக்க முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.