
மடகஸ்கரில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர்களான ஹரக் கட்டா மற்றும் குடு சலிந்து ஆகிய சதேகநபர்கள் இருவரையும் செவ்வாய்க்கிழமை நாட்டிற்கு அழைத்து வருவதற்காக நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து நேற்று மடகஸ்கருக்குச் சென்றுள்ளனர்.
இதன்படி, குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர், பிரதான பொலிஸ் பரிசோதகர் மற்றும் பொலிஸ் விஷேட அதிரடிப்படையின் இரண்டு அதிகாரிகள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதோடு மடகாஸ்கரில் இருந்து இரண்டு பாதுகாப்பு அதிகாரிகளும் குறித்த சந்தேகநபர்களையும் நாட்டிற்கு கொண்டு வர உள்ளனர்.
மேலும், சந்தேகநபர்கள் இருவர் உட்பட 8 பேர் மடகாஸ்கரில் அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டதாக கடந்த 7ஆம் திகதி வெளிநாட்டு ஊடகமொன்று முதலில் செய்தி வெளியிட்டிருந்தது.
அத்தோடு, கடந்த 1ஆம் திகதி மடகாஸ்கரில் உள்ள இவாடோ சர்வதேச விமான நிலையத்தில் 8 பேரும் கைது செய்யப்பட்டதாக செய்தி வெளியிட்டதோடு அதன் பின்னர் இலங்கை பொலிஸாரும் அதனை உறுதிப்படுத்தியுள்ளனர்.