
அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்டுள்ள வரித் திருத்தங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பல தொழிற்சங்கங்கள் நாளை ஆரம்பமாகவுள்ள வாரத்தில் வேலை நிறுத்தம் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டவுள்ளன.
இதன்படி, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை 04 மாகாணங்களில் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அதன் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்தார்.
மேலும், எதிர்வரும் 15ஆம் திகதி ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டம் ஆரம்பிக்கப்படும் என சுகாதார வல்லுநர்கள் சங்கத் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, எதிர்வரும் 15ஆம் திகதி அனைத்து ஆசிரியர் சங்கங்களும் ஒன்றிணைந்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மற்றும் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜயசிங்க ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, நாளைய தினம் நீர் வழங்கல் சபை ஊழியர்கள் சில கடமைகளை விட்டுவிட்டு பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக நீர்வழங்கல் தொழிற்சங்க ஒன்றிணைந்த கூட்டமைப்பின் இணை அழைப்பாளர் உபாலி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்டை மீட்க முழு தொழிற்சங்க இயக்கமும் 06 மாதங்கள் அல்லது ஒரு வருடம் முடியும் வரை அமைதியாக இருக்க வேண்டும் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.