
அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் வரிக் கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து 4 மாகாணங்களில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மேற்கொண்டுள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக நாடளாவிய ரீதியில் பல வைத்தியசாலைகளின் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, மேற்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மத்திய ஆகிய 04 மாகாணங்களில் வேலை நிறுத்தம் காரணமாக தமது வைத்தியசாலையின் மருத்துவ மற்றும் வெளிநோயாளர் பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் டபிள்யூ.கே.விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், அவசர சிகிச்சை மற்றும் அத்தியாவசிய சேவைகள் வழமை போன்று இயங்குவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.
மேலும், களுபோவில மற்றும் ராகம போதனா வைத்தியசாலைகளின் மருத்துவ மற்றும் வெளிநோயாளர் பிரிவுகளும் இன்று பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளதோடு மருத்துவப் பணிப்புறக்கணிப்பு காரணமாக நாட்டின் ஏனைய பகுதிகளிலும் வைத்தியசாலை நடவடிக்கைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.