
இலங்கை சட்டக்கல்லூரியின் பரீட்சைகளை ஆங்கிலத்தில் மாத்திரம் நடாத்துவதற்கு சட்ட கற்கைகள் பேரவை எடுத்த தீர்மானத்திற்கு நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பான அமைச்சர்களின் ஆலோசனைக் குழு இணங்கவில்லை என பாராளுமன்ற தகவல் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், குறித்த குழு அண்மையில் கூடிய போது சட்டக்கல்லூரி பரீட்சைகளை ஆங்கில மொழியில் மாத்திரம் நடத்துவது தொடர்பில் சட்டக்கல்லூரி அதிபர் கலாநிதி அதுல பத்திநாயக்கவிடம் விசாரணை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, ஏற்கனவே சட்டத்துறையில் உள்ள பலர் சட்டக்கல்லூரி பரீட்சைக்கு தங்களுக்கு விருப்பமான மொழியில் தோற்றி தமது தொழில் திறமையை வெளிப்படுத்தும் சுதந்திரத்தின் கீழ் தெரிவாகியுள்ளதாக குழு உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதன்படி, முதன்மை நீதிமன்றங்களின் நடவடிக்கைகளில் சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளே பிரதானமாகப் பயன்படுத்தப்படுவதாகவும், மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றில் மட்டுமே ஆங்கிலம் பயன்படுத்தப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதோடு பல கிராமப்புறங்களில் ஆங்கில மொழிக் கல்வி இல்லாததால், ஆங்கிலத்தில் தேர்வை கட்டாயமாக்குவது அடிப்படை உரிமை மீறல் என்பதால், மாணவர்கள் தமது தாய்மொழியில் தேர்வை எதிர்கொள்ளும் சுதந்திரம் தேவை என்று குழு கருத்து தெரிவித்துள்ளது.
மேலும், இந்நிலையில், ஆங்கில மொழியைக் கட்டாயமாக்கும் ட்ட கற்கைகள் பேரவையின் தீர்மானத்துக்கு, நீதிமன்றங்கள், சிறைகள் மற்றும் அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் தொடர்பான அமைச்சர்கள் குழுவின் ஆலோசனைக் குழு ஒப்புதல் அளிக்கவில்லை.