
புதிய பொலிஸ் மா அதிபரை தெரிவு செய்யும் நடைமுறைகள் மற்றும் முடிவெடுப்பவர்கள் மற்றும் அந்த நியமனத்தில் அரசியல் சாசன நடைமுறைகள் மீறப்பட்டுள்ளமை தொடர்பில் தாம் மிகுந்த கவலையடைவதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
மேலும், அடுத்த பொலிஸ் மா அதிபரின் நியமனம் சம்பந்தப்பட்ட அரசியலமைப்பு ஏற்பாடுகளின்படி வெளிப்படையான நடைமுறையின் ஊடாக தெரிவு செய்யப்பட வேண்டுமென கூட்டமைப்பு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்தோடு, குறித்த பதவிக்குப் பொருத்தமில்லாத ஒருவரை நியமித்து அரசியலமைப்பின் நியாயத்தன்மையை பொதுமக்கள் கேள்விக்குள்ளாக்குவதுடன் அரசாங்கத்தின் மீதான அவநம்பிக்கையை கூர்மைப்படுத்தும் எனவும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதன்படி, முக்கியமான பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கு எதிராக நீதிமன்றங்களில் குற்றவியல் அல்லது அடிப்படை உரிமைகள் வழக்குகள் எதுவும் இல்லாதது அவசியம் என்றும் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்தோடு, பொலிஸ் மா அதிபர் பதவிக்கு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட நபருக்கு அங்கீகாரம் வழங்குவதற்கு பயன்படுத்தப்படும் தீர்மானத்தை மக்கள் மத்தியில் பகிரங்கப்படுத்துமாறு அரசியலமைப்பு பேரவையிடம் கேட்டுக் கொள்ளப்படுவதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனம் விடுத்துள்ள அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.