
இலங்கையின் பாடசாலை மாணவர்களை பல்வேறு குழுக்களால் பணயக் கைதிகளாக பிடிக்க அனுமதிக்கப் போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
மேலும், பாடசாலை துறையில் நிலவும் பிரச்சினைகளுக்கு கலந்துரையாடல் மூலம் விரைவில் தீர்வு காண முடியும் என தாம் நம்புவதாகவும் இல்லையேல் பாடசாலைகளை அத்தியாவசிய சேவையாக மாற்றுவதற்கான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க நேரிடும் என ஜனாதிபதி தெரிவித்தார்.
அத்தோடு, கொழும்பு சங்கமித்தா மகளிர் கல்லூரியில் இன்று முற்பகல் இடம்பெற்ற பாடசாலை மாணவர்களுக்கான இலவச பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்கும் தேசிய நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்படி, கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில், மாணவர் துறவிகள், அருட்சகோதரிகள் மற்றும் 40 மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகளை ஜனாதிபதி வழங்கி வைத்தார்.
மேலும், கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த், பதில் கல்விச் செயலாளர் ஹேமந்த பிரேமதிலக மற்றும் சங்கமித்தா மகளிர் கல்லூரி அதிபர் துஷாரி டி சில்வா ஆகியோர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு நினைவுப் பரிசையும் வழங்கி வைத்தனர்.
இதைத் தொடர்ந்து, 2023 ஆம் ஆண்டிற்கான 70% பாடசாலை சீருடைகள் சீனா அரசாங்கத்திடம் இருந்து மானியமாக பெறப்பட்டு அவை அனைத்தும் தற்போது நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும்மீதமுள்ள சீருடைகள் உள்ளூர் வணிகர்களால் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது .
அத்தோடு, இந்தியக் கடனுதவியின் கீழ் மூலப் பொருட்களைப் பெற்று அரசாங்க அச்சு சட்டப்பூர்வக் கழகம் மற்றும் உள்ளூர் சப்ளையர்களால் அச்சிடப்பட்ட பாடசாலைப் பாடப்புத்தகங்களின் விநியோகம் இங்கு தொடங்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக இந்நிகழ்வில் விநியோகிக்கப்பட்டது.
மேலும், இந்த சீருடை மற்றும் பாடப்புத்தகங்கள் அரச பாடசாலைகள் மற்றும் அரச உதவி பெறும் பாடசாலை மாணவர்களுக்கும், தனியார் கல்வி பயிலும் மாணவ துறவிகளுக்கும் வழங்கப்படுகின்றது.