
இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் குடியுரிமை தொடர்பான பல விடயங்கள் தொடர்பில் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் மற்றும் ஆட்பதிவு ஆணையாளர் ஆகியோரிடம் வாக்குமூலங்களை பதிவு செய்து சமர்ப்பிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன டி அல்விஸ் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு இன்று உத்தரவிட்டுள்ளார்.
மேலும், இராஜாங்க அமைச்சர் டயானா கமகே எப்போது பிரித்தானியா கடவுச்சீட்டுடன் இலங்கைக்கு வந்தார்? இலங்கைக் குடியுரிமைக்கு விண்ணப்பித்திருந்தால் எப்போது? உட்பட பல பிரச்சினைகள் தொடர்பாக குறித்த விசாரணை அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
இதன்படி, குறித்த அறிக்கைகள் கிடைத்த பிறகு, குற்றவியல் நடைமுறைச் சட்டம் 32-வது பிரிவின் கீழ் இராஜாங்க அமைச்சரைக் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்க பாதிக்கப்பட்ட தரப்பு வழக்கறிஞர்கள் விடுத்த கோரிக்கையை பரிசீலிக்க முடியுமா? இல்லையா? என்பது குறித்து முடிவெடுப்பதாக தலைமை நீதிபதி தெரிவித்த்துள்ளார்
அத்தோடு, இது தொடர்பான முறைப்பாடு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, இராஜாங்க அமைச்சர் இரண்டு பிறப்புச் சான்றிதழ்களை சமர்ப்பித்து இரண்டு கடவுச்சீட்டுகளைப் பெற்றுள்ளமை விசாரணையின் போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மனுதாரர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி றியன்சி அர்சகுலரத்ன நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இவ்வாறான தகவல்கள் வெளியாகும் போது சந்தேகநபர்களை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துவது குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் வழமையான நடைமுறை எனவும், இது அசாதாரணமான விடயம் என்பதால் சந்தேகநபர் கைது செய்யப்பட மாட்டார் எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி தெரிவித்தார்.
எனவே, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 32ஆவது பிரிவின் கீழ், டயானா கமகேவை சந்தேகநபராகக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு உத்தரவிடுமாறும் ஜனாதிபதி சட்டத்தரணி றியன்சி அர்சகுலரத்ன நீதிமன்றில் மேலும் கோரினார்.
மேலும், முன்வைக்கப்பட்ட அனைத்து உண்மைகளையும் பரிசீலித்த தலைமை நீதவான், இந்த முறைப்பாட்டை ஏப்ரல் 6 ஆம் திகதி மீண்டும் அழைக்க முடிவு செய்துள்ளார்.