
அப்பாவி மக்களை திருடர்கள் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டும் நபர்களுக்கு எதிராக வலுவான சட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
மேலும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இன்று (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் தேசிய தலைவர்கள், நாட்டைக் காப்பாற்றிய தலைவர்களை பாதுகாக்க இந்தியா போன்றதொரு அமைப்பு இந்த நாட்டில் அமுல்படுத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதன்படி, நாட்டில் ஊழல் மோசடிகளை தடுக்கும் வகையில் மிகவும் வலுவான சட்டமூலமொன்றை கொண்டு வருவதற்கு தேவையான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் ஏப்ரல் மாத இறுதிக்குள் அதனை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும் நாட்டை கட்டியெழுப்ப முன்வந்தவர்களை திருடர்கள் என முத்திரை குத்தி மக்களை அரசியலில் இருந்து அகற்றும் முயற்சிகள் இடம்பெற்று வருவதாகவும், நாட்டை அழித்தவர்களை முன்னிலைப்படுத்தும் போக்கு காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.