
நாட்டில் அரச மற்றும் தனியார் துறைகளில் அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகள் மேற்கொள்ளும் ஊழல் மோசடிகளை தடுப்பதற்கு தற்போதுள்ள இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு சாதகமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மேலும், பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள புதிய ஊழல் ஒழிப்பு சட்டமூலம் உள்ளிட்ட எதிர்வரும் செயற்பாடுகள் குறித்து அறிவிப்பதற்காக இன்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்படி, புதிய ஊழல் ஒழிப்புச் சட்டம் சிலருக்குத் தேவையான சர்வதேச நாணய நிதியத்திடம் முன்வைக்கப்படவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, புதிய ஊழல் தடுப்பு சட்டமூலமானது இந்நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்கு மிகவும் அவசியமான விடயம் எனவும், பாராளுமன்ற வளாகத்தில் வெளிப்படையான வரவு செலவுத் திட்ட அலுவலகம் அமைப்பது உட்பட சர்வதேச நாணய நிதியத்தினால் முன்வைக்கப்பட்ட பல தொழில்நுட்ப விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார். .
இது தொடர்பான சட்டமூலம் மே மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் இது தவிர புதிய சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்கள் நீதிமன்றத்தின் முழு கண்காணிப்பில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளார்.