
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்தியாவின் பணிப்பாளர் நாயகம் பாரத் லால் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளனர்.
மேலும், நேற்று (01) ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில், இலங்கையின் அரச சேவையில் வினைத்திறன்மிக்க மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு எவ்வாறு உதவுவது மற்றும் பயனுள்ள கண்காணிப்பு நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தி அரச நிறுவனங்களின் செயல்திறனை மேம்படுத்துவது எப்படி என கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்தோடு, பொதுச் சேவைகளை வழங்குவதற்கான தகவல் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளதாகவும் இதன் மூலம் பல பில்லியன் ரூபாவை சேமிக்க முடியும் எனவும் நல்லாட்சி நிறுவனத்தின் பணிப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்படி, குறித்த கலந்துரையாடலின் போது, இலங்கையில் பொது நிர்வாகம் மற்றும் பொதுக் கொள்கைகளுக்கான பல்கலைக்கழகம் ஒன்றை அமைப்பதற்கு ஆதரவளிக்குமாறு பாரத் லாலிடம் ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.