
குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றங்களுக்காக இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு பிடியாணை பிறப்பிக்கப்படுமா? இல்லை? இது தொடர்பான தீர்மானத்தை ஏப்ரல் 24ஆம் திகதி அறிவிக்கவுள்ளதாக கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் இன்று உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 32ஆவது பிரிவின் கீழ் டயானா கமகேவைக் கைது செய்வதற்கான உத்தரவைப் பிறப்பிக்குமாறு மனுதாரர் ஓஷல ஹேரத் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி றியன்சி அர்சகுலரத்ன விடுத்த கோரிக்கையை பரிசீலித்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
மேலும், இது குறித்த முறைப்பாடு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் வழங்கிய வாக்குமூலத்தின் ஊடாக பிரித்தானிய கடவுச்சீட்டில் இலங்கைக்கு வந்ததாக டயானா கமகே ஒப்புக்கொண்டதாக முறைப்பாட்டாளர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி தெரிவித்த்துள்ளார்.
அத்தோடு, இலங்கையில் இரட்டைக் குடியுரிமையைப் பெறவில்லை என்பதை அவரே ஒப்புக்கொண்டதாகத் தெரிவித்த ஜனாதிபதி சட்டத்தரணி, இலங்கைப் பிரஜாவுரிமை இல்லாத ஒருவர் எவ்வாறு மூன்று கடவுச்சீட்டுகளைப் பெற்றார் என கேள்வி எழுப்பியுள்ளதோடு குடிவரவு குடியகல்வு சட்டத்தின் கீழ் அவர் குற்றமிழைத்துள்ளதால் அவரை கைது செய்வதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு ஜனாதிபதி சட்டத்தரணி நீதிமன்றில் கோரினார்.
எனினும், டயானா கமகே சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அந்தக் கோரிக்கைக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்ததோடு தனது கட்சிக்காரர் பிரித்தானிய கடவுச்சீட்டில் இலங்கைக்கு வந்தமை இதுவரை நிரூபிக்கப்படவில்லை எனவும் இந்த சம்பவம் தொடர்பான வழக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும், அதன் தீர்ப்பு எதிர்வரும் காலத்தில் வழங்கப்படுமெனவும் தெரிவித்தார். .
மேலும், இந்த வழக்கில் சட்டமா அதிபர் மறைமுகமாக செயற்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை நிராகரிப்பதாக சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் டிஸ்னா வர்ணகுல நீதிமன்றத்தில் தெரிவித்தார்.