
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விபத்து தொடர்பான வழக்குத் தொடர்வது தொடர்பில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற சுற்றுச்சூழல் தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழுவில் இறுதித் தீர்மானம் எடுப்பதற்காக நீதியமைச்சர் மற்றும் சட்டமா அதிபர் தலைமையில் விசேட கூட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதன்படி, சுற்றாடல் மற்றும் இதர சேதங்களின் முழு அளவை கணக்கிடுவதற்கு நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் உறுப்பினர்கள், கப்பலுக்கு அருகில் அல்லது கப்பலின் உள்ளே செல்ல முடியாததால் சுற்றுச்சூழல் பாதிப்பை மதிப்பிடுவதில் சில தடைகள் ஏற்பட்டதாக சுட்டிக்காட்டினர்.
அத்தோடு, கப்பலுக்கு அருகில் செல்வது ஆபத்தானது எனச் சுட்டிக்காட்டி தடுத்தாலும், அதற்கு வசதியாக கடற்படை மற்றும் விமானப்படையின் உதவியைப் பெற்றிருக்க வேண்டும் என நிபுணர் குழு உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும், 2021ஆம் ஆண்டு இலங்கைக் கடற்பரப்பில் விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் எஞ்சிய பகுதிகளுக்குச் செல்வதற்கு தேவையான வசதிகளை உரிய நிபுணர் ஆய்வுக் குழுவுக்கு வழங்குமாறு கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபை மற்றும் தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகவர் நிறுவனத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கப்பலுக்குச் சென்று மாதிரிகள் எடுக்க முடியாமல் இழப்பீடு கோரும் வழக்கில் பாதகமாக இருக்கும் என்பதால், விரைவில் இந்த நடவடிக்கைகளை ஏற்பாடு செய்யுமாறு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு குழு அறிவுறுத்தியுள்ளது.
அத்தோடு, குறித்த கப்பல் மீது வழக்குத் தொடர இன்னும் 45 நாட்களுக்கும் குறைவான காலமே உள்ளதாகவும் இதுவரையில் அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ள நிலையில் சிங்கப்பூரில் வழக்குத் தாக்கல் செய்வது பாதகமானது என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உள்ளிட்ட சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனவே, விபத்து தொடர்பான 6.2 பில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீட்டுத் தொகையை பெற்றுக்கொள்வதற்காக இதுவரையில் கடல்சார் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபை நிபுணர் குழுவின் அறிக்கையை சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைத்துள்ள முலையில் குறித்த அறிக்கையின் அடிப்படையில் உரிய இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுக் கொள்ளுமாறு உடனடியாக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், சுற்றுச்சூழல் விவகாரங்களுக்கான துறைசார் கண்காணிப்புக் குழு ஏப்ரல் 25 ஆம் திகதி மீண்டும் கூடி, இந்த சம்பவம் தொடர்பான இழப்பீடு மீட்பு செயல்முறையின் முன்னேற்றத்தை சம்பந்தப்பட்ட தரப்பினருடன் ஆய்வு செய்ய உள்ளது.