
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தரவு அமைப்பு செயல்முறையை தானியங்குபடுத்தும் செயற்திட்டத்தின் உத்தியோகபூர்வ ஆரம்ப நிகழ்வு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தலைமையில் இடம்பெற்றது.
இதன்படி, போக்குவரத்து, பெருந்தெருக்கள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தனவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் பேரில் நடைமுறைப்படுத்தப்பட்ட இத்திட்டமானது அமைச்சுக்களின் கீழ் இயங்கும் ஏனைய நிறுவனங்களுக்கு முன்னோடியாக அறிமுகப்படுத்துவது அமைச்சரின் நிலைப்பாடாகும்.
அத்தோடு, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவில் இந்த டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தை துவக்கி வைத்து, ஜிபிஎஸ் வசதியுடன் கூடிய பஸ் ஒன்று தலைமை அலுவலகத்தில் இருந்து கண்காணிக்கப்பட்டதுடன் கட்டுப்பாட்டு அறையின் பணிகள் உட்பட முழு செயல்முறையையும் அமைச்சர் பார்வையிட்டார்.
மேலும், இந் நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர், இலங்கையின் பொதுப் போக்குவரத்துத் துறையில் தனியார் பேருந்து சேவைகள் தொடர்பான அனைத்து ஒழுங்குமுறை நடவடிக்கைகளையும் கையாளும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு வரலாற்றில் மிக முக்கியமான படியை ஆரம்பிக்கும் நாளாக இன்று வரலாற்றில் இடம்பிடித்துள்ளதாக தெரிவித்தார்.
அத்தோடு, இதுவரை ஏராளமான மக்களின் உழைப்பையும், நேரத்தையும், பணத்தையும் செலவழித்த பாரம்பரிய நிர்வாகச் செயல்முறைக்குப் பதிலாக, உலகின் மிகவும் முன்னேறிய நாடுகள் பின்பற்றும் முறைகளில் தொடங்கும் இந்த டிஜிட்டல் மயமாக்கல் திட்டம் ஒரு வரலாற்றுப் படியாகும் என்பதோடு பேருந்து போக்குவரத்தின் அனைத்துப் பணிகளையும் பிரதான அலுவலகத்திலிருந்தே கண்காணித்து நிர்வகிக்கும் திறன் கொண்டதானது நேரம், உழைப்பு மற்றும் பணம் உட்பட அனைத்து துறைகளிலும் விரயம், ஊழல், மோசடிகள் மற்றும் திறமையின்மை ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதோடு 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை மூலம் தொடர்ந்து சேகரிக்கப்படும் தரவுகளை பகுப்பாய்வு செய்வது, கார்ப்பரேட் செயல்பாடுகளுக்கு மட்டுமின்றி, பாதுகாப்புத் துறை மற்றும் சட்ட விவகாரங்கள் உள்ளிட்ட பிற துறைகளுக்கும் எதிர்காலத்தில் பெரும் பயனளிக்கும் என தெரிவித்துள்ளார்.
இதன்படி, டிஜிட்டல் மயமாக்கலுக்காக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு எடுத்த நடவடிக்கைகளின் அடுத்த கட்டமாக, நிறுவனத்தின் முழு செயல்முறையையும் டிஜிட்டல் மயமாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க நான் ஆலோசனை கூறுகிறேன் எனவும் இதை முன்னுதாரணமாக கொண்டு, நமது அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மற்ற நிறுவனங்களிலும், மற்ற அரச நிறுவனங்களிலும் இந்த டிஜிட்டல் மயமாக்கல் செயல்முறையை செயல்படுத்துவதன் மூலம், ஒவ்வொரு நாளும் வீணாகும் ஏராளமான உழைப்பு, செல்வம் மற்றும் நேரத்தை மிச்சப்படுத்துவதன் மூலம் சிறந்த பொது சேவையை வழங்க முடியும் என்று நான் நம்புகிறேன். எனவும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த சேவைகளை விரிவுபடுத்தும் வகையில், தற்போது வழங்கப்படும் பாரம்பரிய சாலை அனுமதிகளுக்கு பதிலாக டிஜிட்டல் அட்டையை அறிமுகப்படுத்துவது ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாகவும் அதே நேரத்தில், நிறுவன கொள்முதல் செயல்முறை மற்றும் பிற செயல்பாடுகளை முழுமையாக டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம் மோசடி, ஊழல், முறைகேடுகள் மற்றும் திறமையின்மை ஆகியவற்றை முற்றாகக் கட்டுப்படுத்தி, முன்மாதிரியான பொது சேவையை வழங்கும் பணியை நாங்கள் தொடங்குவதக்கவும் இதுதான் நாட்டுக்காக மக்கள் கோரும் உண்மையான மாற்றம் என்றும் வீழ்ந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதன் மூலம் ஒரு புதிய மாற்றத்தைத் தொடங்க இந்த ஆரம்பம் ஒரு நல்ல சகுனமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன் என அமைச்சர் இங்கு தெரிவித்துள்ளார்.