
மத்திய மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் சந்திரா பெர்னாண்டோவிற்கும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
இதன்படி, குற்றவியல் மற்றும் போக்குவரத்து சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக தம்மை இடமாற்றம் செய்தமை நியாயமற்றது என்றும்,, அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்தோடு, முன்னதாக 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலும் மத்திய மாகாணம், வடமேல் மாகாணம் மற்றும் வடமாகாணத்திற்குப் பொறுப்பான அதிகாரி என்ற வகையில், அவர் அவ்வப்போது 03 தடவைகள் இடமாற்றம் செய்யப்பட்டதாக அவர் சம்பந்தப்பட்ட கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், ஒழுக்கமான அதிகாரி என்ற வகையில், பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் உத்தரவை அமுல்படுத்தியதாகவும், பின்னர் இடமாற்றம் செய்யப்பட்டமை தொடர்பில் தனக்கு அதிருப்தி ஏற்பட்டதால் பொலிஸ் மா அதிபரிடம் முறையிட்டதாகவும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய மேலும் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, குறித்த முறையீட்டின் நகலை அவர் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவருக்கும் அனுப்பி வைத்துள்ளதோடு ஜனவரி 6, 2023 அன்று, பொது பாதுகாப்பு அமைச்சின் பொறுப்பான அமைச்சர் அவரை மீண்டும் மத்திய மாகாணத்திற்கு பொறுப்பான அதிகாரியாக நியமித்து, இதுவரை கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் நிறைவடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இவ்வாறானதொரு பின்னணியில், குறுகிய காலத்திற்குள் மீண்டும் குற்றச்செயல் மற்றும் போக்குவரத்துக்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள் சேவைத் தேவையின் அடிப்படையில் உடனடியாக எந்த காரணமும் கூறாமல் இடமாற்றம் செய்யப்படுவதின் காரணமாக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரின் உருவமும் அந்த பதவியின் கௌரவமும் குறைத்து மதிப்பிடப்பட்டு பாதிக்கப்படும் எனவே இவ்விடயம் தேசிய காவல்துறையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட வேண்டும் என சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தனது இடமாற்றம் தொடர்பில் தென் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் சந்திரா பெர்னாண்டோ மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
மேலும், தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு உட்பட்டு பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளரால் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் எல்.எஸ். பதிநாயக்க, பிரியந்த வீரசூரிய, எஸ்.சி.மெதவத்த, டபிள்யூ.கே.ஜெயலத், ரன்மல் கொடித்துவக்கு, அஜித் ரோஹன மற்றும் எல்.கே.டபிள்யூ.கே.சில்வா ஆகிய 7 சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.