
சூடானில் நிலவும் மோதல் சூழ்நிலை காரணமாக அங்கு தங்கியிருந்த 13 இலங்கையர்கள் மீட்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், இந்த நடவடிக்கைக்கு சவூதி அரேபிய அரசாங்கத்தின் ஆதரவு கிடைத்துள்ளதாகவும், மீட்கப்பட்ட 13 இலங்கையர்களும் ஜித்தாவில் உள்ள இலங்கையின் பிரதித் தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த சூடான் துறைமுகத்தில் மேலும் 12 இலங்கையர்கள் தங்கியுள்ளதாகவும் அவர்களும் பத்திரமாக மீட்கப்பட்டு வருவதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்தோடு, எகிப்தில் உள்ள கெய்ரோவில் உள்ள இலங்கைத் தூதரகமும், சூடானில் உள்ள இலங்கையின் கெளரவ தூதரக அதிகாரிகளும், இலங்கைப் பிரஜைகளை நாட்டிலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றுவதற்காக சூடான் அதிகாரிகள் மற்றும் கார்ட்டூமில் உள்ள இந்தியத் தூதரகம் உட்பட கார்ட்டூமில் உள்ள பிற தரப்பினருடன் தொடர்ந்து தொடர்பு கொண்டு வருகின்றனர்.
இதன்படி, சூடானில் உள்ள இலங்கையர்களை மீட்பதற்கு இந்தியா, சவூதி அரேபியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் இணைந்து இலங்கை அரசாங்கம் செயற்படும் என அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சூடானில் நிலவும் ஸ்திரமற்ற பாதுகாப்பு நிலைமையை கருத்தில் கொண்டு கார்ட்டூமில் எஞ்சியுள்ள இலங்கையர்களை வெளியேற்றுவதற்கு இலங்கை அரசாங்கம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், அவசர காலங்களில் தகவல்களைப் பெறுவதற்காக, கார்ட்டூமில் உள்ள இலங்கையின் கெளரவ துணைத் தூதரகத்தின் செயலாளர் சையத் அப்தெலை +249912394035 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனவும் மேலும் கெய்ரோவில் உள்ள இலங்கை தூதரகத்தை இமெய்ல் மூலம் தொடர்பு கொள்ள slcaironsular@gmail.com மற்றும் தொலைபேசி +201272813000 அழைக்கலாம் எனவும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.